அடையாள அட்டை!
"நான் ஒரு இந்தியன்" - இப்படி, நாம் சொல்லிக் கொள்வதற்கு அரசினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பலவிதமான ஆவணங்கள் நமக்குத் தேவை. அது மட்டுமல்ல இப்படிப்பட்ட ஆவணங்கள் நம்மிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதுதான் நமக்குப் பாதுகாப்பும் கூட. இனி ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
குடும்ப அட்டை
* குடும்ப அட்டையானது... உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையினரால் வழங்கப்படுகிறது. மாநகராட்சிகளில் வசிப்பவர்கள், அந்தத் துறையின் உதவி ஆணையர் அலுவலகத்திலும், இதர பகுதிகளில் வசிப்பவர்கள் வட்ட வழங்கல் அலுவலகத்திலும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அங்கே விநியோகிக்கப்படும்.
* சம்பந்தப்பட்ட அலுவலகத்தில், நம் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டதற்கான ரசீது கொடுப்பார்கள். ரேஷன் கார்டைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேதியையும் குறித்துக் கொடுப்பார்கள். அதை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* விண்ணப்பித்த 15 நாட்களுக்குள், நாம் கொடுத்த தகவல்களை உறுதி செய்வார்கள். பிறகு, அதிகபட்சம் 2 மாதங்களில் ரேஷன் கார்டு நம் கைகளில் இருக்கும்.
* ஏற்கெனவே குடும்ப அட்டையில் பெயர் உள்ள ஒருவர், திருமணமாகி வேறு குடும்பமாகப் பிரிந்து செல்லும்போது, கிராம நிர்வாக அதிகாரியிடம் சம்பந்தப்பட்டவரின் பெயரை நீக்கும்படி கோரி விண்ணப்பித்து, அதற்கான சான்றிதழைப் பெற வேண்டும்.
* புதிதாக ரேஷன் கார்டு பெற விரும்புபவர்கள், ஏற்கெனவே தான் இடம் பெற்றிருந்த ரேஷன் கார்டிலிருந்து பெயர் நீக்கப்பட்டதற்கான சான்றிதழை இணைத்து, வட்ட வழங்கல் அதிகாரியிடம் விண்ணப்பத்தைச் சம்ர்ப்பித்தால் இரண்டு மாதங்களுக்குள் புது ரேஷன் கார்டை பெறலாம்.
* திருமண பந்தம் அல்லது வேறு ஏதாவது வகையில் ஒரு புது நபர் குடும்பத்தில் உறுப்பினராக இணைகிறார் எனில், அவர் ஏற்கெனவே இடம் பெற்றிருக்கும் குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கப்பட்டதற்கான சான்றினை சம்ர்ப்பிக்க வேண்டும்.
* வேறு எங்குமே ரேஷன் கார்டில் பெயர் இல்லாதவர் என்றால், வாக்காளர் பட்டியல் போன்று வேறு ஏதேனும் ஆவணங்களில் அவருடைய பெயர் இருந்தால், அதை வைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று, ரேஷன் கார்டில் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
* குழந்தை பிறந்த பின், அதன் பெயரையும் குடும்ப அட்டையில் சேர்க்க, பிறப்புச் சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
* "பத்திரமாத்தான் வச்சிருந்தேன், கார்டு எப்படியோ தொலைஞ்சு போச்சே...இப்ப என்ன பண்றது...?" என்று கையைப் பிசைபவர்கள்...உங்கள் கார்டு தொலைந்து போன எல்லைக்குள் இருக்கும் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் பதிவு செய்து, எஃப்.ஐ.ஆர். நகல் பெற்றுக் கொள்ளவும். அதனை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொடுத்து, புது அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அடிக்கடி தொலைத்தால், வாங்குவது கடினம்...உஷார்!
* "நாங்க ஒரு ஆறு மாசம் அமெரிக்கா போறோம். கார்டை என்ன பண்றது?" என்பவர்கள்...குடும்ப அட்டையினை சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் / வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்து, 'ஒப்படைப்பு சான்றிதழ்' பெற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட அந்தக் காலத்தில் நீங்கள் உள்ளூரில் இல்லை என்பதற்கான அந்தச் சான்று, சமயத்தில் உதவும்.
வாக்காளர் அடையாள அட்டை
* வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்களுக்கு மட்டும்தான் வாக்காளர் அட்டை வழங்கப்படும். அதுதான் அடிப்படை. எனவே, முதலில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கு விண்ணப்பியுங்கள்.
* மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீங்கள் வசித்தால்...மாநகராட்சி மண்டல் அலுவலகத்தில் இருக்கும் தேர்தல் பிரிவிலும், இதர மாவட்டங்கள் என்றால் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவிலும், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான விண்ணப்பங்களைப் பெறலாம். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
* நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்ட நபர். ஆனால், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையா..? உடனே விண்ணப்பத்தை அனுப்புங்கள். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பிடிக்கும். அடையாள அட்டையும் கிடைக்கும்.
* சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் வழங்கப்படும் 'படிவம் 6 ' எனும் விண்ணப்பத்தைப் பெற்று பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, 18 வயது முழுமையடைந்ததற்கான சான்றிதழ் நகல், எந்த முகவரியின் குடும்ப அட்டை அல்லது, சம்பந்தப்பட்டவரின் புகைப்படம் ஒட்டப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையின் (அரசு அங்கீகாரம் பெற்ற) நகலை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.
* வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விவரங்களில் உங்கள் வயதோ, பெயரோ, வேறு விவரங்களோ மாறியிருந்தால், அதனைத் திருத்துவதற்கு 'படிவம் 8' என்னும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
* 'போன தேர்தலுக்கு திருச்சியில இருந்தேன். இந்த தேர்தலுக்கு திருநெல்வேலியில இருக்கேன். எப்படி மாத்துறது என் வோட்டர் ஐ.டி கார்டை..:' என்று குழம்புபவர்கள், 'படிவம் 8, என்னும் விண்ணப்பத்தில் தன்னுடைய புதிய முகவரியைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
* வாக்காளர் அடையாள அட்டையில் பெயரில் பிழை, உறவினர் பெயரில் பிழை, உறவு முறையில் குழப்பம், தவறான முகவரி, புகைப்படம் மாறியிருப்பது, அட்டை தொலைதல், அட்டை அழிதல், புதிதாக கையடக்க அட்டை வேண்டுதல்...இவற்றுக்கு எல்லாம் 'இபிஐசி 001சி' (EPIC-001C) படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
* தவறான நபர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்று தெரிந்து, அவர்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதை ஆட்சேபித்தோ அல்லது பெயரை நீக்க விரும்பினாலோ, 'படிவம் 7' என்னும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
* தேர்தல் ஆணையத்துக்கான அனைத்து விண்ணப்பப் படிவங்களையும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும்போது, உரிய இடத்தில் பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் இரண்டை ஒட்டி, ஒன்றின் குறுக்கே கையெழுத்து இட்டும், மற்றொன்றின் மீது கையெழுத்திடாமலும் சமர்ப்பிக்க வேண்டும்.
- வளரும்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment