Sunday 12 February, 2012

தசாவதாரம் (Dasavathaaram)


விஷ்ணு புராணத்தில் திருமால் எடுத்த மச்சம், கூர்மம், வராகம், வாமனம், நரசிம்மம், பரசுராமர், இராமாவதாரம், பலராமர், கிருஷ்ணர், கல்கி ஆகிய 10 அவதாரங்களுக்கும் கமலஹாசன் தனது 10 வேடங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் ஒற்றுமையை கொண்டுவந்திருக்கிறார். எந்தெந்தெ வேடங்கள் திருமாலின் தசாவதாரங்களை பிரதிபலிக்கின்றன என்று பார்ப்போம்.


மச்ச (மீன்) அவதாரம் :




மச்ச அவதாரமானது நீர்ப்பிரளயத்திலிருந்து உலகைக் காப்பதற்குத் தோன்றியது போல் ரங்கராஜ நம்பி திருமால் சிலையைக் காப்பாற்றும் போராட்டத்தின் இறுதியில் கடலில் சங்கமமாகி உயிரை விடுகிறான்.

கூர்ம (ஆமை) அவதாரம் :




     திருப்பாற்கடலை அசுரரும் தேவரும் மந்திரமேருவை மத்தாக வைத்துக் கடைகையில் அடியில் பிடிமானத்திற்காகத் திருமால் ஆமை உரு எடுத்து மத்திற்குப் பிடிமானமாக இருந்தார். திருப்பாற்கடலிலிருந்து அமிருதம் சுரக்க இறுதியில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டது. ஜார்ச் புஷ் உருவத்தில் ஆமையாக தோன்றாவிட்டாலும், உலக அரசியலில் அவர் வகிக்கும் முக்கிய பொறுப்பை இது எடுத்துக் காட்டுகிறது. அவர் எடுக்கும் சில முடிவுகளில் உலகத்தின் தலையெழுத்தையே மாற்றி விடும் வல்லமை அவர் ஏற்றிருக்கும் பொறுப்பிற்கு உள்ளது.

வராக (பன்றி) அவதாரம் :  



பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரண்யாக்சன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து பூமியை மறைத்து வைத்து பின் தனது மூக்கின்மேல் வைத்து வெளிக்கொணர்ந்து காப்பாற்றினார். கிருஷ்ணவேணி பாட்டி ‘முகுந்தா முகுந்தா’ பாடலுக்கு வராக அவதாரத்தை செய்து காட்டினார். அதோடு தபாலில் வந்த கிருமியை அலமாரியில் புகுந்து மறைந்துக் கொண்டு பின் வெளியே கொண்டு வந்து கோவிந்தராஜ சிலையினுள் போட்டுவிட்டு, அனைவரையும் கோவிந்தராஜக் கடவுள் காப்பாற்றிவிட்டதாகக் கூறுகிறார்.

நரசிம்ம (பாதி சிம்மம், பாதி மனிதன் )அவதாரம் : 



     திருமால் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார். தன் பரமபக்தனான பிரகலாதனை இரட்சித்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம். சிங்கேன் நரஹசி எனும் சப்பானிய தற்காப்புக் கலைஞனிடம் நரசிம்ம அவதாரத்தின் ஒற்றுமைகளைக் காண முடிகிறது. அவனது பெயரிலேயே ‘சிங்’ சிம்மத்தைக் குறிக்கிறது. ‘நர’ மனிதனைக் குறிக்கிறது. நரசிம்மர் தனது இரண்டு கைகளால் இரணியனைக் கொன்றது போல், சிங்கேன் நரஹசி கிறிஸ்டியன் ஃப்லேட்சரை கொல்வதற்காக தனது தற்காப்புக் கலையைக் கொண்டே, அதாவது ஆயுதமின்றி கொல்லச் செல்கிறான்.

வாமன அவதாரம் : 



வாமன அவதாரத்தில், திருமால் பிராமண சிறுவனாகத் தோன்றி, மகாபலி அரசனிடம் மூன்றடி மண் கேட்டு வானுயர வளர்ந்து மூவுலகத்தையும் அளந்து இறுதியில் மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது அழுத்தி வதம் செய்தார். அதேப்போல், வானுயர வளர்ந்த வாமனரைப் போல், கலிஃபுல்லா கான் உயர்ந்த மனிதராக வளம் வருகிறார்.

பரசுராமவதாரம் :



     பரசுராமர் ஜமதக்னி முனிவருக்குப் பிறந்தவர். பரசு என்றால் கோடரி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடரியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். பாசுராமர் தனது வில்லையும் அமபையும் கொண்டு சத்திரியர்களின் 21 பரம்பரைகளையும் அழித்தார். கிறிஸ்டியன் ஃப்லேட்சர் பரசுராமரைப் போல் பழைய ஆயுதமான கோடரி, அம்பு, வில் வைத்திருக்காவிட்டாலும், நவீன ஆயுதமான துப்பாக்கி கொண்டு அனைவரையும் கொல்கிறார்.

இராமாவதாரம் :



     இல்லறத்திற்கு உகந்த தலைவனாக எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டியவர் இராமர். இவர் தனது மனைவி சீதா பிராட்டியாரின் மீது வைத்திருந்த பாசம் அலாதியானது. தனது மனைவியை இராவணனிடமிருந்து காப்பாற்றுவதற்கு அவர் அனைத்தையும் இழந்தார். அவதார் சிங் வேடம் இராமாவதாரத்தின் ஒற்றுமைகளை வெளிப்படுத்துகிறது. இசையா அல்லது மனைவியா என முடிவெடுக்கும் ஒரு இக்கட்டான நிலைக்கு அவதார் சிங் தள்ளப்படுகிறார். இறுதியில் மனைவிதான் தனக்கு முக்கியம் என மனைவி மீது வைத்திருந்த அன்பை வெளிப்படுத்துகிறார்.

பலராமர் அவதாரம் : 



     பலராமர் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் கிருஷ்ணருடைய அண்ணனாவார். பல்ராம் நாயுடு எனும் பெயர் கொண்ட சி.பி.ஐ வேடம் பலராமர் என்ற பெயருடன் ஒன்றியுள்ளது.

கிருஷ்ணாவதாரம் : 




    வசுதேவர், தேவகி தம்பதியினருக்கு எட்டாவது குழந்தையாக மதுராவில் கிருஷ்ணர் பிறந்தார். கொடுமைக்கார அரசனான இவரது மாமன் கம்சனிடமிருந்து காப்பதற்காக இவர் பிறந்த நாளன்றே இவரை வசுதேவர் யமுனைக்கு அப்பால் இருந்த பிருந்தாவனத்தில் யாதவ குலத்தினரான நந்தகோபர், யசோதையிடம் ஒப்படைத்தார். குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்து காலத்தைக் கழித்த கிருஷ்ணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார். மேலும், இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார். வின்செண்ட் பூவராகன் வேடம் கிருஷ்ணவதாரத்தை பிரதிபலிக்கிறது. நிறத்தில் இருவரும் கறுப்பு. திரௌபதியின் மானத்தைக் காப்பாற்ற கிருஷ்ணர் சேலையைக் கொடுத்ததுபோல், ஆண்டாளின் சேலையை மணல் திருடன் பிடித்து இழுக்கும் வேளையில் பூவராகன் அங்கேத் தோன்றி கற்பழிப்பு முயற்சியைத் தடுக்கிறார். கிருஷ்ணர் தனது இறுதி காலத்தில், வேடன் ஒருவன் தவறுதலாக அவரது காலில் விஷ அம்பெய்ய அவர் விண்ணுலகம் செல்கிறார். அதேப்போல், பூவராகன் சுனாமியின் போது ஒரு காரில் குழந்தைகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும்பொழுது, ஒரு இரும்புத் தூண் அவர் காலில் குத்தி அவரை அங்கிருந்து நகரமுடியாமல் செய்து விடுகிறது. பூவராகன் இரும்புத்தூணை அகற்ற முயற்சி செய்தும் பலனளிக்காமல் நீரில் மூழ்கி இறக்கிறார்.

கல்கி அவதாரம் :



    கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும். கோவிந்த ராமசாமி என்கிற உயிரியல் விஞ்ஞானி கல்கி அவதாரத்தோடு ஒன்றிய ஒரு பாத்திரமாகும். தீயவைகளை அழித்து உலகைக் காக்க வரும் கல்கி அவதாரத்தைப்போல், கிருமி பரவாமல் உலகத்தைக் காப்பாற்ற கோவிந்த ராமசாமி கடுமையாக முயற்சிக்கிறார். இறுதியில் வெற்றியும் பெறுகிறார்.

     கிருத்துவ பைபிளில் உலகம் அழியும் தருவாயில் யேசுநாதர் ஒரு பெரிய படகை அனுப்பி பக்தர்களைக் காப்பாற்றுவார் எனக் கூறுகிறது. அதேப்போல் இப்படத்தில் சுனாமி அலையைக் கண்டதும் விஞ்ஞானியும், தற்காப்புக் கலைஞனும், ஆண்டாளும் ஒரு படகில் ஏறிக் கொள்வார்கள். சுனாமி அலை ஓய்ந்ததும் அப்படகு ஒரு தேவாலயத்தின் மீது நங்கூரமிட்டிருக்கும்.

‘கேயோசு தியாரி’ அல்லது ஒழுங்கிண்மைக் கோட்பாடு எப்படி இப்படக் கருவில் மையமிட்டு கதையின் 10 அவதாரங்களையும் பகடைக் காய்களாய் நகர்த்தியுள்ளது.

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: